மீன் கழிவுகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் மீன் அமிலம் என்பது அமினோ அமிலங்களையும், நைட்ரஜன் சத்தையும் கொண்ட ஒரு சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கியாகும்.
மீனில் உள்ள புரதங்கள் நுண்ணுயிர்களால் செரிக்கப்பட்டு அமினோ அமிலங்களாக பிரிகின்றன. இந்த அமினோ அமிலங்களில் நைட்ரஜன் சத்து (தழைச்சத்து) நிறைந்துள்ளது.
தேவையான பொருட்கள் :
🐟மீன் கழிவுகள் – 1 கிலோ (தலா, தலை, எலும்பு, தோல்)
🐟பனை வெல்லம் (அ) நாட்டுச்சர்க்கரை – 1 கிலோ
🐟கனிந்த வாழைப்பழம் – 5
தயாரிக்கும் முறை :
✅ஒரு பிளாஸ்டிக் வாளியில் உணவுக்கு பயன்படாத மீன் கழிவுகளுடன், சம அளவு பனை வெல்லம் மற்றும் அதனுடன் நன்கு கனிந்த வாழைப்பழத்தை சேர்த்து நன்றாக கலக்கி காற்று புகாமல் மூடி வைக்கவும் .
✅கெட்ட வாயுக்கள் வெளியேறுவதற்காக தினமும் இதனைத் திறந்து மூடவேண்டும்.
✅நாற்பது நாட்கள் கழித்து தேன் போன்ற நிறத்தில் ஒரு திரவம் வாளிக்குள் இருக்கும். இந்த திரவத்திலிருந்து பழவாடை வீசும். இப்படி பழவாடை வீசினால் மீன் அமினோ அமிலம் தயார் என்பதை தெரிந்து கொள்ளலாம் .
பயன்படுத்தும் அளவு :
☑️இவ்வாறு தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 200 மில்லி எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர்களின் மேல் தெளிக்கலாம் .
☑️ஒற்றை நாற்று நடவாக இருந்தால் 40 ஆம் நாள் ஏக்கருக்கு 1 லிட்டர் அமிலத்தை, 120 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர்களின் மேல் தெளிக்கலாம். சாதாரண நடவுக்கு 25 ஆம் நாளிலிருந்து தெளிக்கலாம். இப்படித் தெளிக்கும் போது தண்டுப் பகுதி உறுதியாக இருக்கும்.
☑️கரும்பு பயிருக்கு 250 மில்லி என்ற அளவில் 15 -20 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்கலாம் .
☑️கம்பு , சோளம் ஆகிய பயிர்களுக்கு 150 மில்லி என்ற அளவில் 15 லிட்டர் தண்ணீர் கலந்து அடிக்கவும் .
☑️தீவனப்புல் வளர்ப்பவர்கள் மீன் அமிலம் தெளிப்பதன் மூலம் அதிகமான விளைச்சல் பெற முடியும் .
✅ஒரு முறை தயார் செய்த மீன் அமினோ அமிலத்தை ஆறு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்."